சிங்கப்பூர் என்றாலே மரங்களும் பசுமையும் நினைவுக்குவரும். முன்பு காடாக இருந்து இன்று நவீன நகரமாக உருவாகியிருந்தாலும் மரங்கள் மீதான கரிசனை இன்றும் இருக்கிறது. அரசாங்கமும் மரங்களை வளர்ப்பதில் அக்கறை காட்டுகிறது. தெருவோரங்களில் அடுக்குமாடித் தொடர் கட்டடங்களுக்கு நடுவே மற்றும் இயற்கைப் பூங்காக்கள் என பலவிதமான இடங்களில் மரங்கள். விரைவுப் போக்குவரத்து வீதிகளின் நடுவிலும் இரு கரைகளிலும் மரங்கள் வரிசையாய் நிற்பது கண்ணுக்கு குளிர்ச்சியான விடயம். மேலும் பச்சை இல்லங்களை உருவாக்குவதில் கட்டட முதலாளிகளுக்குச் சலுகை அளிக்கின்றது அரசு. வியாபார அடுக்குமாடி நிலையங்களிலே 'sky park ' எனப்படும் பூங்காக்களைக் காணமுடியும். பொதுவாகவே மரங்களும் மலர்களும் மனதுக்கு இதமாளிப்பவை. நமது கிராமங்களில் எல்லாம் முதியவர் இளையவர் என வயது வித்தியாசமின்றி ஒரு வேப்பமரத்தடியிலோ ஆலமரத்தடியிலோ இருந்து புதினம் பேசுவார்கள். அது மறக்கமுடியாத நினைவுகளாய் மனதில் ஓடும். சுத்தமான காற்றை உருவாக்குவதில் மரங்களின் பங்கு மகத்தானது.
அன்றொருநாள் சிங்கப்பூரிலே 'புகிட் பட்டோக்' என்னும் இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள 'வெஸ்ட் மால்' என்னும் பல்பொருள் அங்காடியில் ஒரு சிறப்பான கண்காட்சி. அது பசுமை இல்லம் பற்றிய ஒரு விழிப்புணர்வும் தகவல் களஞ்சியமுமாக இருந்தது. சிங்கப்பூர் கட்டட நிர்மாண வாரியம் ஒழுங்கு செய்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது. பலவிதமான கண்காட்சி வடிவமைப்புக்கள் பச்சை இல்ல நிர்மாண மாதிரிகள் என சிறப்பான வடிவமைப்பு. மேலும் பார்வையாளர்களைக் கவர்ந்தது அங்கே நடத்தப்பட்ட போட்டி ஒன்று. சதுரப் பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கூடுதலான பெட்டிகளை அடுக்கியவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. இத்தகைய சமூகம் சார்ந்த சுற்றுப்புறம் சார்ந்த நிகழ்வுகள் நாட்டுக்குத் தேவையானவை.
நான் அவதானித்த இன்னொரு விடயம் சிங்கப்பூரிலே மரங்களை இஷ்டப்படி வெட்டமுடியாது. தேவைப்படின் மரங்களை அப்படியே பிடுங்கி மீள்நடுகை செய்வார்கள். அண்மையில் பெருவிரைவு ரயில் நிர்மாணத்துக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்ட மரங்கள் எனது புகைப்படக் கருவியில் சிக்கின... பெரிய மரங்கள் கூட இங்கே சர்வ சாதாரணமாக மீள்நடுகை செய்யப்படுவது சிங்கப்பூரின் சிறப்பு.
மீண்டும் சந்திப்போம்...


No comments:
Post a Comment