Saturday, June 25, 2011

தாயக வலம் (பகுதி 9 )

அளவெட்டி என்றாலே கோவில்கள் அழகு
ஆங்கங்கே பல கோவில்கள் உண்டு...
பிள்ளையார் கோவில் என்றால்
சின்னப் பிள்ளைகூடச் சொல்லும் பெயர்
'கும்பழாவளைப் பிள்ளையார் கோவில்...'
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே அமையப்பெற்று
மூன்று தேர்கள் பவனிவர
ஊரின் நடுவிலே அருள் கொடுக்கும் விநாயகர்...
சரித்திரப் பெருமை பல சாற்றிடும் கோவிலாக
மிடுக்கோடு மிளிரும் கோபுரம்...!
குதிரை முகம் மறையவென கும்பிட்ட பெண்
'மாரதப் புரவீக வல்லி'
கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று...
யாழ் மண்ணிலே ஏழு விநாயகர் கோவில்களில்
அளவெட்டி கொண்டது மூன்று கோவில்கள்...
குடியிருக்கும் மக்கள் குறை தீர்க்கவென வீற்றிருக்கும்
செழுமைமிகு மூர்த்தி அவர்...
பலர் கனவில் வழிகாட்டி
பலர் மனதை உரமாக்கி
உண்மைப் பொருளுரைக்கும் சித்தி விநாயகர்...
திருவிழா என்றாலே ஊரே களை கட்டும்...
மாவிலை தோரணமாய் தெருவெங்கும் வண்ணமயம்...
காலையில் மணியோசை கதிரவன் வரவு சொல்ல
ஆனந்தப் பொழுதின் ஆரம்பம்...
கொடியேறி விட்டாலே குடும்பங்களில் குதூகலம்...
எழாம் திருவிழாவில் 'வாணவேடிக்கை' சிறப்பு...
மிட்டாய்க் கடைகளும் கச்சான் கடைகளும்
வீதியெங்கும் நிறைக்க
பக்தர் குறை தீர்க்கப் பவனிவரும் பிள்ளையார்...
சப்பரமும், வாகனமும் சகடையில் அலங்கரிப்பும்
நித்தமொரு பொலிவோடு நிமிர்ந்துவரும் பிள்ளையார்...
ஊர்கூடித் தேரிழுக்க ஒய்யார வீதிஉலா
மூன்று மூர்த்திகளும் சேர்ந்துவரும் இன்பவிழா...
தீர்த்தக் கரையோரம் விநாயகர் வீற்றிருக்க
தீர்த்தத் திருவிழாவில் பொங்கிடும் பக்த வெள்ளம்...!
'சின்ன' மேளங்களும், காவடி ஆட்டங்களும் சிறப்பான
சமயச் சொற்பொழிவுகளும்,
'வாரியார்' கால் பட்ட வரலாறு இங்குண்டு ...
அன்னதானம் என்றாலே ஊரே உதவி செய்யும்
அவரவர் பங்குகளை அன்போடு உபசரிக்கும்...
அளவையூர் பெருமைகளுக்கு
அளவே இல்லை சொல்லச் சொல்ல...

பாதை தொடரும்...

2 comments:

  1. பழைய பிள்ளையார் கோவிலின் படங்களை பார்ப்பதற்கு வழி செய்தமைக்கு நன்றி

    ReplyDelete