Wednesday, June 29, 2011

சிங்கப்பூர் பக்கங்கள் (பகுதி 1)

சிங்கத்தின் ஊர் என்ற பொருளைக் கொண்டதும் 'சிங்கப்பூரா' என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும்(சிங்கா- சிங்கம் ,பூரா- ஊர்) கருதப்படும் சிங்கப்பூர் இன்று ஓர் சிறந்த நாடாக மிளிர்கிறது. சுமாத்திரா மலாய் இளவரசர் 'சாங் நிலா உத்தமா' 14 ம் நூற்றாண்டளவில் கடும் புயலுக்கு ஒதுங்கிய தீவு இதுவென்றும் அங்கே அவர் கண்ட மிருகத்தைச் சிங்கமென எண்ணி 'சிங்கப்பூரா' என்று அழைத்ததாகவும் கதைகள் உண்டு. இந்த இடம் முன்பு கடாரம் கொண்ட சோழபுரத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது என்றும் வரலாறு கூறுகிறது.
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், 'சார் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ்' இத்தீவில் கால்பதிக்க அன்று ஆரம்பமானது பிரித்தானியர்களின் தலையீடு. அவர்களின் தலையீடு 1965 ல் சிங்கப்பூர் சுதந்திரமடையும் வரையிலும் இருந்தது. இது பல்லின மக்களும் வாழும் ஓர் தீவாக இன்றுவரை இருந்து வருகின்றது. திரு லீ குவான் யூ அவர்களின் வழிகாட்டலில் விரைவான வளர்ச்சிகண்டு இன்று பொருளாதாரத்திலும் சுற்றலாத் துறையிலும் முன்னிற்கிறது. இயற்கையான வளங்கள் ஏதுமின்றி மூளையை மூலதனமாக்கி உயர்ந்துள்ள நாடு எனும் பெருமை சிங்கபூரிற்கே உரியது. ஆசியாவின் வர்த்தக முக்கியத்துவம் உள்ள ஓர் கேந்திரமாக இது உருவாகி இருக்கிறது.
வானுயர்ந்த கட்டடங்களும் நெடும் சாலைகளும் எங்கு நோக்கினும் பசுமை மரங்களும் அழகு சேர்க்கும் சிங்கார நகரம். இரவில் மின்னும் விளக்குகளின் வெளிச்சத்தில் ஓர் தனி அழகு மிளிரும். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் எந்த நேரத்திலும் பயமின்றிய நடமாட்டம். ஓர் சொர்க்கபுரியாக அனைவரையும் சுண்டி இழுக்கும் நகரம். வெளிநாட்டவர்க்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவரவேண்டும் என எண்ணவைக்கும் உல்லாசபுரி. கேளிக்கைகளும் உற்சாகமும் நிறைந்த இந்த ஊர் பற்றி தொடர்ந்து பல சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளேன்.

மீண்டும் சந்திப்போம்...

No comments:

Post a Comment