Wednesday, June 29, 2011

சிங்கப்பூர் பக்கங்கள் (பகுதி 1)

சிங்கத்தின் ஊர் என்ற பொருளைக் கொண்டதும் 'சிங்கப்பூரா' என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும்(சிங்கா- சிங்கம் ,பூரா- ஊர்) கருதப்படும் சிங்கப்பூர் இன்று ஓர் சிறந்த நாடாக மிளிர்கிறது. சுமாத்திரா மலாய் இளவரசர் 'சாங் நிலா உத்தமா' 14 ம் நூற்றாண்டளவில் கடும் புயலுக்கு ஒதுங்கிய தீவு இதுவென்றும் அங்கே அவர் கண்ட மிருகத்தைச் சிங்கமென எண்ணி 'சிங்கப்பூரா' என்று அழைத்ததாகவும் கதைகள் உண்டு. இந்த இடம் முன்பு கடாரம் கொண்ட சோழபுரத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது என்றும் வரலாறு கூறுகிறது.
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், 'சார் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ்' இத்தீவில் கால்பதிக்க அன்று ஆரம்பமானது பிரித்தானியர்களின் தலையீடு. அவர்களின் தலையீடு 1965 ல் சிங்கப்பூர் சுதந்திரமடையும் வரையிலும் இருந்தது. இது பல்லின மக்களும் வாழும் ஓர் தீவாக இன்றுவரை இருந்து வருகின்றது. திரு லீ குவான் யூ அவர்களின் வழிகாட்டலில் விரைவான வளர்ச்சிகண்டு இன்று பொருளாதாரத்திலும் சுற்றலாத் துறையிலும் முன்னிற்கிறது. இயற்கையான வளங்கள் ஏதுமின்றி மூளையை மூலதனமாக்கி உயர்ந்துள்ள நாடு எனும் பெருமை சிங்கபூரிற்கே உரியது. ஆசியாவின் வர்த்தக முக்கியத்துவம் உள்ள ஓர் கேந்திரமாக இது உருவாகி இருக்கிறது.
வானுயர்ந்த கட்டடங்களும் நெடும் சாலைகளும் எங்கு நோக்கினும் பசுமை மரங்களும் அழகு சேர்க்கும் சிங்கார நகரம். இரவில் மின்னும் விளக்குகளின் வெளிச்சத்தில் ஓர் தனி அழகு மிளிரும். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் எந்த நேரத்திலும் பயமின்றிய நடமாட்டம். ஓர் சொர்க்கபுரியாக அனைவரையும் சுண்டி இழுக்கும் நகரம். வெளிநாட்டவர்க்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவரவேண்டும் என எண்ணவைக்கும் உல்லாசபுரி. கேளிக்கைகளும் உற்சாகமும் நிறைந்த இந்த ஊர் பற்றி தொடர்ந்து பல சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளேன்.

மீண்டும் சந்திப்போம்...

Monday, June 27, 2011

தாயக வலம் (பகுதி 10 )

கோவில் இல்லா ஊர்களிலே குடியிருக்க
பேயும் அஞ்சும்....
ஆலயம் இல்லா இடத்தில்
ஆளரவம் இருக்காது...!
நான்கு பக்கமும் மதில்கள் சூழ
ராஜகோபுரம் நிமிர்ந்து நிற்க...
ஒருபக்கம் தேர்முட்டி
மறுபக்கம் அன்னதான மண்டபம்...
கும்பழாவளையின் சிறப்புக்கள் ஆயிரம்...
தொண்டர்சபை நடத்தும் 'பண்ணிசை வகுப்பு'
நெஞ்சில் நிழலாடும்...
அளவெட்டியில் சங்கீதமென்றால்
அவர் பெயர்தான் முதலில் வரும்...
'வி.கே நடராசா' ஊரே அறிந்த பெயர்...
அவர் நடத்தும் பண்ணிசையில் தேவாரம்
தேனாய் ஒலிக்கும்...
திருவாசகம் கேட்டால் திகட்டாத மருந்தாகும்...


முன்னைய ஆலயத்தின் உட்சுவரில்
ஓவியங்கள்...
பளிங்குக்கல்லில் பக்குவமாய் வரைந்த
காவியங்கள்...
அழகுக் கோலமிட்ட கரங்கள் அவருடையது
'ஆர்ட் மாஸ்டர் பொன்னம்பலம்'
ஆலயத் திருப்பணியில் அலாதியான இன்பம்...
அளவெட்டிக் கோவில்களில் அவர் கைவண்ணம் மின்னும்...
இன்றைய பொழுதுகளில் ஆலயச் சுவர்களில்
அந்த ஓவியங்கள் இல்லை...
எங்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றன...

எங்கள் ஆலய மணியின் நாதம்
அற்புதமான ஒன்று...
அளவெட்டி முழுவதுமே அழகாகக் கேட்கும் இசை...
போர்க் காலங்களிலும்
நித்திய பூசைகள் இடைவிடாது நிகழ்ந்தது
கும்பழாவளையில் பெருமை...
கடல் கடந்து போனாலும் அவர் அருள்
நடை தளர்ந்து போனாலும் அவர் துணை...!


பாதை தொடரும்...

Saturday, June 25, 2011

தாயக வலம் (பகுதி 9 )

அளவெட்டி என்றாலே கோவில்கள் அழகு
ஆங்கங்கே பல கோவில்கள் உண்டு...
பிள்ளையார் கோவில் என்றால்
சின்னப் பிள்ளைகூடச் சொல்லும் பெயர்
'கும்பழாவளைப் பிள்ளையார் கோவில்...'
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே அமையப்பெற்று
மூன்று தேர்கள் பவனிவர
ஊரின் நடுவிலே அருள் கொடுக்கும் விநாயகர்...
சரித்திரப் பெருமை பல சாற்றிடும் கோவிலாக
மிடுக்கோடு மிளிரும் கோபுரம்...!
குதிரை முகம் மறையவென கும்பிட்ட பெண்
'மாரதப் புரவீக வல்லி'
கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று...
யாழ் மண்ணிலே ஏழு விநாயகர் கோவில்களில்
அளவெட்டி கொண்டது மூன்று கோவில்கள்...
குடியிருக்கும் மக்கள் குறை தீர்க்கவென வீற்றிருக்கும்
செழுமைமிகு மூர்த்தி அவர்...
பலர் கனவில் வழிகாட்டி
பலர் மனதை உரமாக்கி
உண்மைப் பொருளுரைக்கும் சித்தி விநாயகர்...
திருவிழா என்றாலே ஊரே களை கட்டும்...
மாவிலை தோரணமாய் தெருவெங்கும் வண்ணமயம்...
காலையில் மணியோசை கதிரவன் வரவு சொல்ல
ஆனந்தப் பொழுதின் ஆரம்பம்...
கொடியேறி விட்டாலே குடும்பங்களில் குதூகலம்...
எழாம் திருவிழாவில் 'வாணவேடிக்கை' சிறப்பு...
மிட்டாய்க் கடைகளும் கச்சான் கடைகளும்
வீதியெங்கும் நிறைக்க
பக்தர் குறை தீர்க்கப் பவனிவரும் பிள்ளையார்...
சப்பரமும், வாகனமும் சகடையில் அலங்கரிப்பும்
நித்தமொரு பொலிவோடு நிமிர்ந்துவரும் பிள்ளையார்...
ஊர்கூடித் தேரிழுக்க ஒய்யார வீதிஉலா
மூன்று மூர்த்திகளும் சேர்ந்துவரும் இன்பவிழா...
தீர்த்தக் கரையோரம் விநாயகர் வீற்றிருக்க
தீர்த்தத் திருவிழாவில் பொங்கிடும் பக்த வெள்ளம்...!
'சின்ன' மேளங்களும், காவடி ஆட்டங்களும் சிறப்பான
சமயச் சொற்பொழிவுகளும்,
'வாரியார்' கால் பட்ட வரலாறு இங்குண்டு ...
அன்னதானம் என்றாலே ஊரே உதவி செய்யும்
அவரவர் பங்குகளை அன்போடு உபசரிக்கும்...
அளவையூர் பெருமைகளுக்கு
அளவே இல்லை சொல்லச் சொல்ல...

பாதை தொடரும்...

Thursday, June 23, 2011

தாயக வலம் (பகுதி 8 )



குண்டூசி விசாரணையால்
பள்ளிக்கூடமே அதிர்ந்தது...
வரிசையில் நிற்கவைத்து வகையாய்க் கேள்விகள்...
அனைவருமே ஆடி நிற்க
அவன் சொன்னான் பதில்...
'பரீட்சை வினாத்தாளில் குத்திவைத்த குண்டூசி
பக்குவமாய்த் தவறிக் கதிரையில விழுந்துதென்றான்'
பாவம் கடைசியில பழி
தமிழ் வாத்தியார் மேல்...
அவர்தான் கடைசியாய் விடைத்தாள் கொடுத்தவர்...


ஆண்டு மூன்று...
அப்போதும் பல குழப்படிகள்
தாண்டி வந்தோம் பல தடைகள்...!
இல்ல விளையாட்டுப் போட்டியென்றால்
இனிக்கும் எங்களுக்கு...
அன்றைக்கு பாடம் நடத்தமாட்டார்கள் என்று...
புதுசாய் உடுப்புக் கேட்டு
வீட்டிலே பெரும் சண்டை...
வண்ண வண்ணக் குருவிகளாய்
வகை வகையாய் சுற்றுவோம்...
சின்ன வகுப்பினர்க்கும் போட்டிகள் பல உண்டு
'பணிஸ்' உண்ணும் போட்டிக்கு
வாங்கி வைத்த 'பணிஸ்களை'
யாருக்கும் தெரியாமல் தின்றது ஒரு 'வால்'...
கோலம் போடவைத்த வெள்ளை மாவைச்
சீனி என்று
அள்ளி வாயில் போட்டு அலறியது ஒரு 'வால்'...
கயிறிழுத்தல் போட்டிக்கு
கைதட்டப் போன ஒன்று...
வாழைப்பழத் தோலை காலடியில் போட்டுவிட
வழுக்கி விழுந்தது ஒரு பக்க அணி...
வினோத உடைப் போட்டிக்கு
பாரதியாய் நடிக்கப்போய்...
கட்டிய வெட்டியும் கழன்று விழ
தலைப்பாகை கழற்றி இடுப்பிலே கட்டியது...
நடந்த கூத்துக்கள் பல பல...

பாதை தொடரும்...

Wednesday, June 22, 2011

நீதானா அவள்...?

பார்வையிலே பல கோணங்கள் எதிர்நோக்கி
போர்வையிலே என்றும் போர்க்களமாய் நின்று
தீர்வையாக ஆயிரம் கோலங்கள் மனதிலிட்டு
கோர்வையாக அலைமோதும் எண்ணங்கள் எங்கே?

சுதந்திரம் என்மனதில் சுற்றுகிறது பெண்ணே
நிரந்தரம் எப்போதும் நிலைத்துநிற்கும் கண்ணே
தந்திரம் உள்ளவரை மந்திரம் பலிக்காது பெண்ணே
அரங்கம் தரும் நிழலில் அமைதிகள் தூங்காது கண்ணே...!

முடிவே இல்லாது தொடர்கிறது அவலநிலை
விடிவே விடியலுக்காய் விடிகிறது இயல்புநிலை
வடிவே வானவில்லில் வளைகிறது அழகுநிலை
கொடிதே புன்னகையில் கொன்றுவிடும் இன்பநிலை...!

வெள்ளி மழையருவி பொழிந்த வான்நிலவே
அள்ளி அமுதத்தை தெளித்த தேன்மலரே
துள்ளி இதயத்தில் கொலுவிருந்த தாய்மொழியே
கிள்ளி எறியாதே கீதை சொல்ல யார் வருவார்?

முகம் பார்த்து மலர்ந்த புன்னகைப் பூவே
நிலம் பார்த்து வலம்வரும் நித்திய நிலவே
மனம் பார்த்து அமர்ந்த மல்லிகை வாசமே
வனம் பார்க்கவைத்த சகியே ! வாழ்வு என்ன பல்லாங்குழியா?

Tuesday, June 21, 2011

நீ, நான், கல்லறை

உன் செல்லச் சிணுங்கல் கேட்டு
செவியெல்லாம் குளிர்ந்ததெடி
என்னைச் சுற்றிச் சுற்றி நீ வந்தால்
பித்துப் பிடிக்குதெடி
உன் உதடு என் உடம்பில்
பட்டாலே சுர்றேங்குது...
உன் வாயால் நீ செய்யும்
குறும்பு என்னைக் கொல்லுது...
உன் பாடல் கேட்டாலே
சங்கீதம் சலாம் போடும்...
நீ போகும் பாதையெல்லாம்
நிமிடங்கள் நொடியாகும்...
கூட்டத்தோடு நீ வந்தால்
கும்மிருட்டும் பௌர்ணமிதான்...
வீட்டை விட்டு நீ சென்றால்
ஊரே உனக்காக...
இறுதியில் தெரிந்தது
நீ கடித்தால் 'டெங்கு' வருமெண்டு...
என் இனிய நுளம்பே(கொசுவே)...!

Monday, June 20, 2011

தாயக வலம் (பகுதி 7 )

ஆண்டு இரண்டு...
குறும்புத்தனங்களுக்குக் குறைவில்லாப் பருவம்...
அப்போது எங்களுக்குக் கணக்கென்றால்
கடுகளவும் பிடித்தமில்லை...
பச்சைப் பாவற்காயை பல்லிடுக்கில் வைத்தது போல்
கசக்கும் பாடமது...
(கற்ற கணிதம் தான் சோறு போடுது இப்போது)
கணித பாட வாத்தியாரைக் கண்டாலே ஒரு வெறுப்பு...
வீட்டுப் பாடமேண்டால் விளக்கெண்ணை எங்களுக்கு...
விளங்குதோ விளங்கேல்லையோ
'கொப்பி' முழுக்க எழுதவேணும்...
தெரிஞ்சுதோ தெரியல்லையோ
கரும்பலகையைப் பார்க்கவேணும்...
தண்டனையாய் அவர் தரும் பிரம்படிக்கு
குந்தி இருந்தாலும் நோகும் முழங்கால்...
அப்பிடித்தான் அவன் பெடியன் அடிவாங்கித் தவித்தவன்
வாத்தியார் கதிரையில குண்டூசி வைத்தவன்...
கணக்கு வாத்திக்கோ அதிஷ்டம் வேலைசெய்ய...
கதிரையில இருந்தது பாவம் 'இங்கிலீஷ் டீச்சர்'...
கோபத்தில டீச்சர் கொட்டித் தீர்த்த இங்கிலிஷில்
தலைமை ஆசிரியரே கதிகலங்கி போனாரே...!
கடைசியில பெடியனுக்கு என்ன நடந்தது...?

பாதை தொடரும்...

Saturday, June 18, 2011

தந்தையர்களுக்கொரு கீதம்....!


மண்ணிலே நாம் பிறக்க மகிழ்வோடு அரவணைத்தாய்
கண்ணிலே தூசி பட்டால் கண்ணே எனப் பதைபதைத்தாய்
எண்ணமே எல்லாம் எங்கள் உயர்வுதான் என்றும்
திண்ணமாய் திரண்ட தோள்கள் எம்மைத் தாங்குதற்கே...

முதல் வயதில் நீ தந்த முத்தங்கள் இனித்தது
இரண்டாம் வயதில் விரல் பிடித்து நடந்தது இனித்தது
மூன்றாம் வயது உன்மேல் உப்புமூட்டை ஏறியது
நான்காம் வயதில் நீ சுற்றிக் காட்டிய இடங்கள்
ஐந்தாம் வயது நீ சொன்ன அனுபவக் கதைகள்
பத்து வயதிலே படிப்பு நீ சொன்னாய்
இருபது வயதிலே வாழ்க்கையை நீ சொன்னாய்
முப்பது வரும்போது உணர முடிந்ததது உன்னை...
நானும் ஓர் அப்பாவாக...!

Friday, June 17, 2011

தாயக வலம் (பகுதி 6 )


பாடும் பறவைகளாய் கூடித் திரிந்த நாட்கள்...
ஆரம்பப் பாடசாலை அது
அனைவரும் ஆசையோடு அழைக்கும்
'அன்னம்மா பாடசாலை'...
ஆண்டு ஒன்று ஆரம்பமானது...
கல்வி முறையோடு கற்பிக்கும் ஆசிரியர்களும்...
தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும்
கரும் பலகைகளும்...
எங்கள் பயணத் திசை மாற்றின...

இதுவரையிருந்த விளையாட்டுப் புத்தி போய்
இனி எங்கள் கனவு வழி
இனிப்பாகத் திறந்தது...
'அறிவு' அனுபவந்தரும் 'கல்வி அறிவு' வழிகாட்டுமென
அப்போது புரிய ஆரம்பித்தது...
அழகியல் கல்வி ஆர்வமூட்ட
ஆலய மணிகள் காதில் கேட்க...
மாலை கட்டுதலும் கோலம் போடுதலும்...
பசை வைத்து பட்டம் ஒட்டுதலும்
வேலை பலவாறு
வீட்டுப் பாடம் ஒரு நூறு...
கணக்கு வாத்தியார் சொன்ன பாடத்தைக்
கவனிக்காத ஒரு பயல்...
கதிரையில் வைத்த குண்டூசி...
என்ன கதை? ....

பாதை தொடரும்...

Tuesday, June 14, 2011

அன்னை திரேசா


அன்புக்குப் பொருள் கேட்டால் அன்னை என்பேன்
அதிலும் உதாரணம் கேட்டால்
'அன்னை திரேசா' என்பேன்...
இன மத பேதமின்றி ஒரே பார்வை...
இயலாமை இல்லாத நெடும் பயணம்...
அவதாரம் 1910 ல்
அன்று அவர் பெயர்
'அக்னஸ் கொயின் ஷா பெஜாக்கியூ'...
சிறுவயது முதல் ஈர்த்தது மக்கள் தொண்டு
கல்கத்தாவில் ஆசிரியராய் கனிவான ஆரம்பம்...
1948 அவர் வைத்திய தாதி ஆக
ஏழைகள் மகிழ்வுறவே எழுந்து நின்றார்
தெய்வமாக...

சேரிஎங்கும் சென்று சேவைகள் பல செய்தார்
சேமமுற வேண்டுமென்று நோயாளர் பணி செய்தார்
கருணை இல்லமாய் மாறியது அவர் வாழ்வு
காரிருள் அகற்றியே காட்டினார் மகிழ்வோடு...
எளிமையும் அமைதியும் எப்போதும் குடியிருக்க
எடுத்துக்காட்டாய் அவர் பயணம் ...
மனிதமும் மனிதனும் மதிப்பிழந்த பொழுதுகளில்
மறக்கமுடியா அவர் தியாகம்...
அமைதிக்காய் பரிசு பெற்று 'நோபலுக்கே'
பெருமை சேர்க்க
அகில உலகமெங்கும் அன்னையின்
பணி தொடர...
ஆண்டு 1997 ல் அன்னையின் பிரிவு...
ஆனாலும் நெஞ்சங்களில் நிழலாடும் உங்கள்
நினைவு...!

Monday, June 13, 2011

அம்மா...!

அகரத்தில் பிறப்பெடுக்க உந்தன் உதிரத்தில் பால்தந்து
உதரத்தில் உதைத்தாலும் எம் உயிர் சுமந்து
நீதந்த வாழ்வு இது உனக்காக வரும் அன்பு...
காலத்தில் மாறிவரும் கனவான தேசத்தில்
என்றென்றும் மாறாத உன் பாசம் தானடி...
தன் மகவு பிழை செயாதென தாயன்பு பரிதவிக்கும்
தான் பட்ட துன்பமெல்லாம் துசாக நினைந்திடும்...
உள்ளன்பு உரிமையோடு உன்னதமாய் பேணிவிடும்
உலகமெல்லாம் ஓடி ஓடி உன் நிழலைக் காத்திடும்...
தள்ளாத வயதிலும் தாய்க்குத் தன் பிள்ளை
தாலாட்டுப் பாடலிலும் தாய்க்கு ஒப்பில்லை...
நீ விழுந்தால் - வலிக்கிறது அவளுக்கு
நீ எழுந்தால் - இனிக்கிறது அவளுக்கு...
நீ நடந்தால் - நிழலாய் அவள் அசைவு
நீ வாழ்ந்தால் - நிம்மதி அவள் கனவு...

இவ்வுலக வாழ்வுதனில் உனக்கேதும் நிகரில்லை
இனி ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும்
நீதான் வேண்டும் என் அம்மாவாய்....!

Saturday, June 11, 2011

தாயக வலம் (பகுதி 5)

சிறு வயது பல கனவு
சீர்தூக்கும் கல்வித் தாகம்...
அப்பொழுதெல்லாம் எங்களுக்குள் பேதமில்லை
சாதியில்லை சண்டையில்லை...
எல்லோரும் நண்பர்கள்
எல்லோரும் சகோதரர்கள்....
ஆண் பெண் வித்தியாசம் கூட இல்லை...
அரிசியில் அப்பா கைபிடித்துத் தொடங்கிவைத்த
'அ' சொல்லித்தந்தது பல விடயங்கள்...
அன்பு, அம்மா, அரிச்சுவடி, அக்கறை, அறிவு
என ஆயிரம் அர்த்தங்கள்...
'அரசியல்' என்றபோது 'அ' மதிப்பிழந்து போனது...
ஆரம்பப் பள்ளி...
வசந்தங்களைப் பார்த்த நாட்கள் அவை...
வினோத உடைப் போட்டிகளில் எங்கள்
வித்தியாசமான முகங்கள் பார்த்தோம்...
காந்தியாய் பாரதியாய் காவடி ஆட்டக்காரனாய்
நேருவாய் சங்கிலியனாய் நெப்போலியனாய்...
கனவுகளுக்கு உருவந்தீட்டி அழகு பார்த்தோம்...
விளையாட்டுப் போட்டிகள் அவை எங்கள்
வீரம் வளர்த்தன...
'சங்கீதக் கதிரை' எங்கள் சாமர்த்தியம் சொல்ல...
'தேசிக்காய்க் கரண்டி' பொறுமையைச் சோதிக்க
'ஓட்டப் போட்டிகள்' முன்னேற்றம் காட்ட
'பலூன் உடைத்து' மும்மலங்கள் தொலைத்தோம்...
அப்படியே ஆண்டுகள் உருண்டோடின...
பாலர் பள்ளிக்கு விடைகொடுக்கும்
அந்தநாளும் வந்தது...

பாதை தொடரும்...

(Thanks to www.Alaveddy.ch for images)
ஈஸ்வரன் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி
அளவெட்டி

Thursday, June 9, 2011

முதல் சந்திப்பு...! (09.06.2006)


கண்ணோடு கண்ணோக்கி உன் முகத்தைப் பார்த்தநாள்
நெஞ்சோடு நினைவில் வைக்கப்படும்...


நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ திரும்ப அன்று
நிலம் பார்த்துச் சிரித்தது நம்மை...


அறுவடையாய் ஐந்தாண்டு ஓடியது சந்தித்த பின்பு உன்னை
மறு பிறவியிலும் அங்கே காண்...


மனதோடு மலராக உன் நினைவில் மகிழ்ந்திருக்க நீ
மல்லிகையாய் வாசம் கொள்...


நோக்கிய கண்கள் நொடிப்பொழுதில் நாணி நிற்க பார்வை
தாக்கியே பனித்தன கண்கள்...

Tuesday, June 7, 2011

தாயக வலம் (பகுதி 4)


பாலர் வகுப்புக் குறும்புகள் பல பல
பக்கம் பக்கமாய் எழுதலாம் இயம்பிட....
சிறு வயது துடி துடிப்பு
எல்லாமே இருந்தன அங்கே...
புது முகங்கள் பல ரகங்கள் (பெண்கள்)
புதுப் புது அர்த்தங்கள்...
மழலை மொழி கிள்ளைப் பேச்சு
மகிழ்வான இன்னொரு உலகமது...
எழுதுவது 'சிலேட்டில்' ஆனால்
வார்த்தைகள் பதிந்தன மனத்தில்...
எண்ணிப்பார்க்க மனக்கணக்கு
நினைப்பில் வரும் சின்னப் பாடல்கள்...
எல்லாமே புதியதாய்...
ஆனாலும் குறும்புகட்கு அளவே இல்லை...
அங்கங்கே 'வால்' பெடியளுக்குக்
குறைவே இல்லை...!
பின்னல்களைப் பிடித்திழுக்கும் கிருஷ்ணர்கள்
ஒரு சிலர்...
பிழையாக பாட்டுப் பாடும் சீண்டல்கள்
ஒரு சிலர்...
கண்ணிமைக்கும் பொழுதிலே பென்சிலைக்
களவாடும் குறும்புகள்...
அப்பப்பா அடுக்கடுக்காய் ஆயிரம் கதைகள்...
எல்லாமே ஒருங்கிணைந்த கோவிலாய்
பள்ளி...
எல்லோர் மனங்களிலும் தெய்வமாய்
ஆசிரியை... !

பாதை தொடரும் ...

Sunday, June 5, 2011

தாயக வலம் 3


துள்ளித் திரிந்த காலம்
கரைய ஆரம்பித்தது.....
பாலர் பள்ளி போக
அழைப்பு வந்தபோது...
வழுக்கை ஆற்று வரப்புகளில்
நடந்த நிமிடங்கள்
வயல் கிணறுகளில்
'யாம்' போத்தல் கட்டி
மீன் பிடித்த ஞாகபங்கள்...
பெருமாக்கடவைத் தாமரைக் குளத்தில்
பூ பறித்த நாட்கள்...
பனம்பழம் பொறுக்கி நெருப்பில் சுட்டுத்
தின்ற காலங்கள்...
பனைமரத்துக் கள் முட்டிக்கு
கல்லெறிந்து உடைத்த கணங்கள்...
எல்லாமே கரைய ஆரம்பித்தன...
'அ' என்று தொடங்கி ...
அடிப்படைக் கல்வி ஆரம்பித்தது...
'ஈஸ்வரன் முன்பள்ளி'
எங்களை அரவணைக்க...
அரிச்சுவடிப் பாடம்
அழகாய்த் தொடங்கியது...

பாதை தொடரும்...