Sunday, May 29, 2011
தாயக வலம் (பகுதி 2)
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவுகள்
ஓடித்திரிந்த வயல்வெளிகள்
சப்பாத்தி முள்ளுத் தைத்தாலும் கூட
சலிக்காமல் திரிந்தோம்...
முயல் பிடிக்க முழங்காலைக் குத்தி
இரத்தம் வேண்டுமென நம்பினோம்...
சுடலைப் பக்கம் போனால்
பேய் நிற்குமெனப் பயந்தோம் ...
சமவெளிகள் தேடித் திரிந்து
எட்டுமூலைப் பட்டம் விட்டோம்...
சரியான பாதையென்று குருவி தேடிப்
பற்றைகளில் தொலைந்து நின்றோம்...
நிலாச் சோறு பாட்டிக் கதைகள்
நீண்ட உறக்கம்
எல்லாமே கரைந்து போயின....
எப்போது...?
பாதை தொடரும்...
Wednesday, May 25, 2011
தாயக வலம் (பகுதி 1)
எப்போதும் ஒரு மயான அமைதி விடியல்
நிம்மதி கலைக்கும் நாய்களின் ஓலம்
நிலம் தகர்ந்ததாய் நினைப்பில் கூவும் சேவல்
பனையோலைச் சலசலப்பில் பறக்கும் குருவி
தாய் முலை நாடத் தவிக்கும் கன்று
ஏர் பூட்ட வரிசையில் எழுந்து நிற்கும் எருது
கார் காலமெனக் கலைந்து செல்லும் ஈசல்
கறையான் புற்றெடுக்க கவனமாய் நுழையும் பாம்பு
தோட்டத்து சத்தத்தில் தொலைவில் கத்தும் ஆள்க்காட்டி
குஞ்சு மிரள பருந்தை விரட்டும் தாய்க் கோழி
நித்தமும் கரையும் காகம்
நிமிட முள்ளாய்ச் சுற்றி வரும் செக்குமாடு
அதிகாலை கோவிலின் அழகான மணியோசை
கூண்டுக் கிளிகளின் அழுகுரல் பாடல்
கூச்சல் போடும் ரயிலின் சங்கீதம் - என
எம் தேசத்து வாசங்கள் பல பல...
அது அன்றைய காலம் ...
நாம் தவழ்ந்து வளர்ந்து திரிந்த காலம்
இன்று இல்லாத காலம்
இனியும் கேள்விகளாய் நிற்கும் காலம்....
பாதை தொடரும்....
Friday, May 20, 2011
குத்தும் விழிப் பார்வை
சந்தந் தரும் வண்ணக்கவி சிந்தைஎங்கும் நிறைய
பந்தம் எனப் பாசம் என கிள்ளைமொழி நுழைய
தத்தி வரும் தையல் இடை சுத்தி மனம் அலைய
கத்தி எனக் குத்தும் விழிப் பார்வை கண்டு நெளிய
தத்தை இவள் மொத்தம் அழகியல் கவி வரைய
நித்தம் வரும் ஒரு சிற்பம் நீஎனப் பாடாரோ....!
பந்தம் எனப் பாசம் என கிள்ளைமொழி நுழைய
தத்தி வரும் தையல் இடை சுத்தி மனம் அலைய
கத்தி எனக் குத்தும் விழிப் பார்வை கண்டு நெளிய
தத்தை இவள் மொத்தம் அழகியல் கவி வரைய
நித்தம் வரும் ஒரு சிற்பம் நீஎனப் பாடாரோ....!
இடைவெளி...!
Subscribe to:
Posts (Atom)