Sunday, July 25, 2010

உயிர் தந்த மண்ணே...!



தாய் தோன்றித் தந்தையரும் ஊர் போற்ற வாழ்ந்து நாளும்
வேரூன்றி விழுதுவிட்ட செம்மண் தேசமிது
பார் போற்றும் பசுமை எங்கும் சீர்தூக்கிச் சிறப்புகளாய்
கார்மேகம் கறுத்திருந்து மாரிமழை பொழிந்திடுமே
ஏர்பூட்டி உழவர்நிதம் நிலமதனைப் பண்படுத்தி
தார்மீகப் பொறுப்போடு தரிசுநிலம் மேம்படுத்த
நெல்வயலும் சிறுபயிரும் நீந்திவரும் தென்றலுமே..
நல்வரிகள் சொல்லிடுமே நம் தாய்மண்ணே!

ஈழத்துப் பனைமரங்கள் என்றென்றும் கதைகூறும்
காலத்து மீன்கள் என்ன கருவாட்டுத் தீண்டலென்ன
இசை எழுப்பும் ஆழ்கடலும் மலர் தாவும் வண்டுகளும்
குயிலினமும் மயிலினமும் கூத்தாடித்தான் மகிழும்
குவளைமலர்க் கூட்டமெங்கும் அலைபாய்ந்து மனம் நெளியும்
பயிர் சிறக்கும், பண்போடு மக்கள் கூட்டம்
உயிர் பிறக்கும் உறவுகளும் உளமகிழ்ந்து கொண்டாடும்
செயல்மலர செழிப்பான பூமியெங்கும் பூ மலர...!

சுந்தர நாட்கள் சிறகடித்துச் சுழன்றுவர
மந்திரக் கவிதையாய் மனங்களில் நிறைவுவந்து
என்றுமே தமிழோசை உலகமெங்கும் ஒலித்திட
செம்மொழியாம் நம்மொழியின் எழுச்சியினைப் பதிவுசெய்து
சப்பாத்திமுள்ளும் காலைச் சரிபார்த்துக் குத்திநிற்க
சாம்பல்பூத்த மண்ணில் சங்கதிகள் பலசொல்ல
சரித்திரத்தில் ஓர் பக்கம் சகத்திரத்தில் கால்பதிக்க
உயிர் தந்த மண்ணே நீ, இன்று உணர்வு தருவாயா...!

அளவை கலைக்கரன்

No comments:

Post a Comment