Tuesday, March 9, 2010

கும்பழாவளை அமர்ந்த அருட்கொடையே..!



கொம்பனே நினதடி தொழுது கொன்றையின் மலர்த்திலகமிட்டு
எம்பெருமானென எடுத்திருகைகூப்பி செம்பொன்னின் நிறச்செல்வா திருவடியில்
அண்ணலும் அன்புகொண்டு அரனடி சேவிக்கும் காலம்
தண்மையின் வடிவமாகித் தரணியில் உயர்வு தருவாயே...!

கும்பழாவளை அமர்பதி நல்கும் குவளையின் எழில் உருவே
மங்கிடாத புகழ் பரப்பி மண்ணின் மகத்துவம் கூறித்
தங்கிடும் இதயசுத்தித் தளிர்களாய் அடியார்கொண்ட
எந்தனின் மனதில் கொலுவிருக்கும் எந்தையே தருவாய் அருளே..!

சிந்தையில் உணர்வின் பெருக்கால் முந்தைய வினைகள் களைந்து
தந்தையாய் எண்ணிப் பக்தர் தயவொடு கால்கள் பற்ற
வந்தருள் புரியும் விநாயக வடிவனின் மலர்த்தாள் தொட்டு
கந்தனின் மூத்தோனென்று கைதொழுது போற்றுகின்றோம்..!

பசுமையாய் வயல்கள் சூழ்ந்து பண்புறு அளவைமாநகரில்
இனிமையும் விருந்தோம்பும் இன்முக மாந்தர் வாழும்
செழுமையின் தூய பக்திச் செல்வராய்ப் பலரும் வேண்டித்
தொழுதிடும் தலத்திலுறையும் தொண்டர்தம் தொண்டா போற்றி ..!


அளவை கலைக்கரன்

No comments:

Post a Comment