Thursday, August 5, 2010

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...!


கருவானக் கருப்பையிலே கடலோடு சங்கமித்த கறுப்பே
அடர்காட்டில் ஒளி புகாது அடைத்து நிற்கும் கறுப்பே
இடர்பாட்டில் இதயங்களுள் இருளோடு அலைபாயும் கறுப்பே
கடன்வாங்கி உன் நிறத்தைக் களவாடியவர் யார்...?

அளவை கலைக்கரன்

Saturday, July 31, 2010

நட்புக்கா(க்)க...!


அந்திவானச் சிரிப்பில் அடங்கும்
முகிலின் பொன்னிறம் ...
அள்ளித்தெளிக்கும் கண்ணீர்க் காவியின்
வெள்ளைமனத்தின் சுவடுகள்...
சொல்லத்தெரியாத சுமைகளின்
வடிகால் வனப்பாக வந்த நட்பு...!
உள்ளத்தனையது உதவிடும் எனச்
சொல்லத்தான் வேண்டுமா?
நிச்சய உலகின் நிமிட முட்களுக்குள்
சூரியப் புயலாய்ச் சுட்ட நெடி...
மனதுள் புகைந்து கருகும்
நினைவுகளின் நிஜம்...!
எரிமலைக் கோலத்தில் மழைத்துளி...
நிம்மதி கிடைத்திடும்
மனதில் மகிழ்வு...
தூய நட்பிலே
துலங்கிடும் மலர்வு...!

அளவை கலைக்கரன்

Friday, July 30, 2010

வா வா பூவே வா ...!


வறுமை நிலை எழுந்து வாசல் உடைகிறதே
இனிமை மழை எரித்து தணலாய்ச் சுடுகிறதே
பொறுமை நிலம் தகர்ந்து புழுதி நிறைகிறதே
மறுமை வனம் பூத்த வசந்த வாழ்வே வா...!

Wednesday, July 28, 2010

சுட்டெரிக்கும் தீ ...!


நிமிடங்கள் யுகங்களாகும்
வாழ்வு இங்கே அரங்கேற்றம்...
இது காலத்தின் தவறா...?
கடிகாரத்தின் விதியா...?
மானிடராய்ப் பிறந்தோம்
மனிதத்தை மறந்தோம்...
பூமியிலே புதைவதற்குப்
பூர்வீகம் காரணமா..?
அறிவின் விருத்திகாய்
அழிவுகளில் பிள்ளையார் சுழியிடுகிறாய்...
கண்ணீர்,
கலன் கணக்கில்...
தண்ணீர்ப் பஞ்சம்..
தலைவிரித்தாட...
கண்ணகி இனியும் வேண்டுமா...?
இன்னொரு மதுரை
தயாரா...?

Tuesday, July 27, 2010

தெரியாது...!


கற்பனையைப்
பேனாவின் முனையில்
தேக்குகிறேன் ...
எழுத்துலகில்
இறைவன் அனுப்பிவிட்டான்...
தமிழ்த்தாயின் வயிற்றில்
இரண்டாம் பிரசவம்...
எழுத்தாலே எனை உணரக்
கருத்தாழமில்லாது
கதைகளாய்க் கவிதையிட்டேன்...
இவை எல்லாம் ஏன் ?
மன்னிக்கவும் ..
எனக்கும் தெரியாது
விடை...!

Sunday, July 25, 2010

உயிர் தந்த மண்ணே...!



தாய் தோன்றித் தந்தையரும் ஊர் போற்ற வாழ்ந்து நாளும்
வேரூன்றி விழுதுவிட்ட செம்மண் தேசமிது
பார் போற்றும் பசுமை எங்கும் சீர்தூக்கிச் சிறப்புகளாய்
கார்மேகம் கறுத்திருந்து மாரிமழை பொழிந்திடுமே
ஏர்பூட்டி உழவர்நிதம் நிலமதனைப் பண்படுத்தி
தார்மீகப் பொறுப்போடு தரிசுநிலம் மேம்படுத்த
நெல்வயலும் சிறுபயிரும் நீந்திவரும் தென்றலுமே..
நல்வரிகள் சொல்லிடுமே நம் தாய்மண்ணே!

ஈழத்துப் பனைமரங்கள் என்றென்றும் கதைகூறும்
காலத்து மீன்கள் என்ன கருவாட்டுத் தீண்டலென்ன
இசை எழுப்பும் ஆழ்கடலும் மலர் தாவும் வண்டுகளும்
குயிலினமும் மயிலினமும் கூத்தாடித்தான் மகிழும்
குவளைமலர்க் கூட்டமெங்கும் அலைபாய்ந்து மனம் நெளியும்
பயிர் சிறக்கும், பண்போடு மக்கள் கூட்டம்
உயிர் பிறக்கும் உறவுகளும் உளமகிழ்ந்து கொண்டாடும்
செயல்மலர செழிப்பான பூமியெங்கும் பூ மலர...!

சுந்தர நாட்கள் சிறகடித்துச் சுழன்றுவர
மந்திரக் கவிதையாய் மனங்களில் நிறைவுவந்து
என்றுமே தமிழோசை உலகமெங்கும் ஒலித்திட
செம்மொழியாம் நம்மொழியின் எழுச்சியினைப் பதிவுசெய்து
சப்பாத்திமுள்ளும் காலைச் சரிபார்த்துக் குத்திநிற்க
சாம்பல்பூத்த மண்ணில் சங்கதிகள் பலசொல்ல
சரித்திரத்தில் ஓர் பக்கம் சகத்திரத்தில் கால்பதிக்க
உயிர் தந்த மண்ணே நீ, இன்று உணர்வு தருவாயா...!

அளவை கலைக்கரன்

Friday, July 23, 2010

மனதில் சுமைகள் ...!


உயரமாய்ப் பறப்பதற்கு
சிறகுகள் கடன்வாங்கி
இதயத்தில் தாளமிட்ட ...
ஓசையில் கோலமிட்டு
காத்திருந்தான்...
ஏழை வயிற்றில் எரிதணலாய்
வந்து...
அவன் வாலிபக் கனவுகளை
சிறையிட்டது காலம்...!
எதிரிகள் என்று
யாரையும் எண்ணியதில்லை...
அப்போது
நண்பர்கள் கூட ஏமாற்றிவிட்டார்கள்...
பிரபஞ்ச எல்லைக்கோட்டில்
சூரியப் பறவைகளாய்...
அனற்பிளம்பாகி அவன் மனம்
மௌனமாய் அழுகிறது...
மாற்றங்கள் அவன் காதலில்
வருமென்று...
காத்திருக்கிறான் தனியாக...!

அளவை கலைக்கரன்
சுடர் ஒளி
28 ஜனவரி 2002

Thursday, July 22, 2010

நிஜம் எது ?


பொய் என்று கூறி
வார்த்தை வானவில்லாய்
உண்மை வளைகிறதே...
தேடப்படும் போதே
தொலைந்துவிட்ட வாழ்க்கை...
நிரந்தரப் புதைகுழியில்
தள்ளப்படும் இளைஞர்கள்...
நிலவுக்குக் கல்லெறியும்
நிஜமில்லா நினைவுகள்...
சுயநல ஏகாதிபத்தியத்தில்
சுருண்டழும் மானுடங்கள் ...
ஏக்கங்கள் நெருப்பாகித்
தோற்றங்கள் கருக்க...
புன்னகை மறந்து
புதுயுகம் என்கிறீர்களே...?
பிரபஞ்சத்தின் எல்லைகளிலாவது
நிஜங்கள் தேடப்படுமா...?
இனியாவது...!!!

அளவை கலைக்கரன்
சுடர் ஒளி,
16 டிசம்பர் 2001

Wednesday, July 21, 2010

பொறுமை


நிலம் தகர்ந்து ...
ஆகாயம் ஆர்ப்பரிக்க
நிஜங்களின் மரணத்தில்
சுவாசிக்கப்படாத காற்றுக்கு
விலை பேசப்படுகிறதே...!
சுதந்திரத்தின் எண்ணங்கள்
தினந்தினம் மூச்சுத்திணறுகின்றன...
யுத்தத்தின் சத்தத்தில்
யுகங்களாய்க் கடந்தாலும்...
சத்தியம் நிலைத்து நிற்க..
நித்தமும் ஒரு தவம் இங்கே...!
பொறுமையுடன் ...
சரித்திரம் காத்திருக்க
சகத்திரத்தில் அமைதிக்காய்
நித்தமும் ஒரு தவம் இங்கே...!

அளவை கலைக்கரன்
தினக்குரல்
07 ஒக்டோபர் 2001

Tuesday, March 9, 2010

கும்பழாவளை அமர்ந்த அருட்கொடையே..!



கொம்பனே நினதடி தொழுது கொன்றையின் மலர்த்திலகமிட்டு
எம்பெருமானென எடுத்திருகைகூப்பி செம்பொன்னின் நிறச்செல்வா திருவடியில்
அண்ணலும் அன்புகொண்டு அரனடி சேவிக்கும் காலம்
தண்மையின் வடிவமாகித் தரணியில் உயர்வு தருவாயே...!

கும்பழாவளை அமர்பதி நல்கும் குவளையின் எழில் உருவே
மங்கிடாத புகழ் பரப்பி மண்ணின் மகத்துவம் கூறித்
தங்கிடும் இதயசுத்தித் தளிர்களாய் அடியார்கொண்ட
எந்தனின் மனதில் கொலுவிருக்கும் எந்தையே தருவாய் அருளே..!

சிந்தையில் உணர்வின் பெருக்கால் முந்தைய வினைகள் களைந்து
தந்தையாய் எண்ணிப் பக்தர் தயவொடு கால்கள் பற்ற
வந்தருள் புரியும் விநாயக வடிவனின் மலர்த்தாள் தொட்டு
கந்தனின் மூத்தோனென்று கைதொழுது போற்றுகின்றோம்..!

பசுமையாய் வயல்கள் சூழ்ந்து பண்புறு அளவைமாநகரில்
இனிமையும் விருந்தோம்பும் இன்முக மாந்தர் வாழும்
செழுமையின் தூய பக்திச் செல்வராய்ப் பலரும் வேண்டித்
தொழுதிடும் தலத்திலுறையும் தொண்டர்தம் தொண்டா போற்றி ..!


அளவை கலைக்கரன்