Monday, November 16, 2009

உயிரில் பாதி நீதான் ....!


ஒரு வசந்தம் வந்தது என் வாழ்வில்.
தென்றலாய் நீ வந்த பின்பு
நிலவுக்குப் பறந்தது என் சுவாசம்
நிலவின் மகாராணி நீ என்று அறிந்தபோது...
கனவில் எல்லாம் நீ வருவாயென
பகல் முழுதும் தூங்கியவன் நான்..
உன் வார்த்தை என்மேல் பூக்கள் தூவ..
பூங்காவில் காத்திருந்தேன் உனக்காக...
கடல் அலைகளில் உன்பெயர் தெரிய..
கரையிலும் மணலில் எழுதினேன் கவிதை...
எனக்குள் என்றாகியவளே - என்
உயிரில் பாதி நீதான் ....!

Saturday, November 14, 2009

இனி ஒரு விதி செய்ய


பயிர்கள் கருகும் வாசத்தின் நினைவுகளில்
உயிர்கள் உருகும் உறவுகள் கதறும்
மயிர்கள் கூச்செறியும் மனிதம் மூச்சுவாங்கும்
தயிரின் கடைதலில் தவிக்கும் ஜென்மங்களாய் ..!

கண்களுக்குள் நிறைந்து வழிந்தோடும் கண்ணீர்
பெண்களுக்குத் தினமும் பேரிடியாய் உயிர்வலிகள்
சந்தனத்தில் கரையும் குருதியின் பேரலைகள்
அந்தரத்தில் ஊசலாடும் ஆன்மாக்களின் அழுகுரல்கள் ...!

ஒற்றைப்பனை அருகில் ஓய்வெடுத்த காலங்கள்
நட்ட நடுநிசியில் நான் திரிந்த வயல்வெளிகள்
கட்டுமரங்கட்டி மீன் பிடித்த சிறு குளங்கள்
வற்றும் கடல்போல வரண்டதுவோ வாழ்க்கை இன்று ..!

சுற்றும் பூமியெங்கும் சுடுகாட்டின் வாசனைகள்
நிற்கும் கால்களுக்கு நிலையில்லா ஊன்றுகோல்கள்
சத்தம் காதடைக்கச் சகதிகளாய்ப் பிணக்குவியல்கள்
நித்தம் எதிர்பார்ப்பு நிம்மதி வந்திடுமா..?

வயல்களில் பயிரிட்டால் மிதிவெடிகள் முளைக்கின்றன
மரங்களின் பூக்களில் விரல்களாய்ப் பூக்கின்றன
நிஜங்களின் அர்த்தங்கள் புரியாமல் தேய்கின்றன
மனங்களில் கனவுகள் .. மகிழ்ச்சி வந்திடுமா..?

ஆலய வீதிகளில் ஆங்காங்கே புதைகுழிகள்
பாலை நிலமாய் மாறும் என் பசுமைப் புல்வெளிகள்
சாலைகளில் எங்கும் தடைகளின் காற்தடங்கள்
வேலையின்றி வாடும் மானிட வாழ்நிலைகள்..!

ஈரநெஞ்சத்தில் பாயும் அம்புகளாய் சோகம்
இசையின் சுருதிகளில் பாயும் எங்கள் கானம்
சேலை நுனியில் நெருப்பாய் மானம்
நாளை என்னவென்று நடுங்கும் நிலையில் தேசம்..!

தென்றலின் வருடல்கள் சுவாசமாய் சுற்றிவர
ஆசையில் சுழலும் எண்ண ஓசையில் கரைய
வானம் நமக்காக நாளை விடியலிட
காணும் கனவுகளில் உருவம் வரவேண்டும் ..!

தொழிற்றுறை வளர்ச்சியோடு பல்கலையும் பெருக
தொன்மையின் சிறப்புகள் ஊரெங்கும் தெளிக்க
களித்திடும் வாழ்வில் நாம் துள்ளி விளையாட
இனித்திடும் எதிர்காலம் இனி வந்திடுமா ..?

புதிதாய்ப் பூமி செய்வோம் புதுமையாய்
மனிதரை மீண்டும் வளர்ப்போம் செழுமையாய்
மல்லிகை வாசத்தால் வானம் நிறைப்போம்
நட்சத்திரங்களைக் கூரையில் பந்தலிடுவோம்..!

Friday, November 13, 2009

தெளிவு


பனையோலையை மீண்டும் தூசுதட்டி எழுத ஆரம்பிக்கிறேன்... சிங்கப்பூர் வாழ்க்கை சொல்லும் பாடங்கள் எத்தனையோ... இயந்திரமயமான வாழ்க்கையின் ஓட்டத்தில் ... அங்காங்கே பல திருப்பங்கள்..
அன்று தீபாவளி நாள். செந்தோசா பூங்கா செல்லலாமென என் செல்லம் ஆசைப்பட, அழகிய பயணம்... தொடரூர்ந்து விரைந்தது கால ஓட்டம்போலவே.. அழகு தமிழில் ஒலிபெருக்கி அறிவிப்புகள்... நாங்கள் எங்கோ தொலைத்த தமிழ் நெஞ்கில் கனத்தது. எங்கள் தேசத்தின் புகைவண்டியில் மலசலகூட அறிவிப்புப் பலகையில் கூடத் தமிழ்க் கொலை.

ஒருவழியாக பூங்கா வந்தோம். அழகான அந்த இடம் பல மொழி பேசும் மனிதர்களின் சங்கமமாக இருந்தது. அப்படியே மேலே எழுந்து சுற்றி மீண்டும் கீழே வரும் ராட்டினம் கண்களை உறுத்தியது.. சற்று நேரம் உற்றுப் பார்த்தேன்.
உயர்ந்து பறந்து மேலே போனவர்கள் எல்லாம் கீழே வரத்தான் வேண்டும் என்ற வாழ்வியல் தெரிந்தது. மெல்ல மெல்ல ராட்டினம் கண்களிலிருந்து மறைய மனதில் ஓர் தெளிவு வந்தது.

அனுபவம் தொடரும்...